வெள்ளி, 14 மே, 2010

பொறியியல் மட்டுமே படிப்பா?

புற்றிசல் போல் தமிழகத்தில் தற்போது எங்கு நோக்கினும் பொறியியல் கல்லூரிகள். எந்த மாணவரைக் கேட்பினும் பொறியியல் மாணவர்கள். ஆண்டுக்கு 50-புதிய பொறியியல் கல்லூரிகளேன தற்போது தமிழகத்தில் சுமார் 427 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதைத்தவிர பல பல்கலைக்கழகங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் பொறியியல் படிப்புகளை கணக்கு வரையற்ற அளவில் வழங்கி வருகின்றன.

ஆண்டுக்கு சுமார் இரண்டு இலட்சம் பொறியியல் மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமிருந்து வெளிவருகின்றனர். இப்படி பொறியியல் பற்றியதான மோகம், தமிழகத்தில் முற்றிவிட்டதன் காரணம் பொறியியல் படித்துமுடித்தவுடன் கைநிறைய சம்பளம் பன்னாட்டு நிறுவனங்களில் கிடைத்துவிடுகிறது என்கிற நம்பிக்கைதான். இதில் உண்மையும் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்பாக.ஆனால், தற்போது நிலைமை வேறு. பொருளாதார வீழ்ச்சி, பொருளாதார தேக்கநிலை என உலகப் பொருளாதாரமே தள்ளாட்டம் கண்டுவிட்ட நிலையில் புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் நிறுத்தப்பட்டுவிட்டன. பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் கூட அதிகளவில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது. இந்த சூழ்நிலையில் மந்தை மந்தையாக பொறியியல் படிப்பினை படிப்பது புத்திசாலித்தனமாககுமா என்பதை சிறிது பொறுமையுடன் யோசிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஓரளவிற்கு உயர்ந்த/சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிட்டவர்களுக்கு அவ்வளவாக பாதிப்பு இல்லை. காரணம், அவர்களுக்கு வளாகத் தேர்விலேயே வேலை கிடைத்துவிடும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், இந்த உப்புமா கல்லூரிகளில் படிப்பவர்களின் நிலைதான் பெரும் திண்டாட்டம்/போராட்டம். படிப்பு முடித்தும் கூட வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் ஒண்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவது இந்த உப்புமா கல்லூரி மாணவர்கள் தான். பணத்தை வாரியிறைத்தும் தன் மகனுக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் பெற்றோருக்கு இருப்பது தொடர்கதையே. அரசே, எல்லோருக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவது என்பது இயலாத காரியம். தற்போது ஓரளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்திருப்பதன் காரணம் தனியார் நிறுவனங்களின் அசுரவளர்ச்சி தான். ஆனால், இவர்களும் தற்போது கடுமையான நிதிநெருக்கடியினால் முன்புபோல வேலைவாய்ப்பினை வாரிவழங்குவது கிடையாது.

மென்பொருள் நிறுவனங்களைப் பொறுத்தவரை அனுபவத்திற்கு மட்டுமே முதல்நிலை. படிப்பெல்லாம் கடைநிலை தான். ஆதலால், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமெனில் கட்டாயம் பொறியியல் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஓரளவிற்கு சிறந்த கல்லூரியில் B.Sc (Maths, Physics, Chemistry. IT), B.C.A., B.Com.,B.A(Economics) & Diploma படித்தவர்கள் கூட மென்பொருள் நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்தில் சேரமுடிகிறது. பொறியியல் படித்தவர்களும், இவர்களும் ஒரே சம்பளத்தைத் தான் பெறுகின்றனர். அப்படியிருக்க ஏன் அநாவசியமாக பணத்தை இறைத்து பொறியியல் படிக்க வேண்டும்?

எண்ணற்ற கலைப்பாடங்கள் தற்போது வழக்கொழிந்து வருவது வேதனைக்குரியது. வாழ்க்கையை ரசிக்கக் கற்றுத்தருவது கலைப்பாடங்கள் தான் என்றால் அது மிகையாகாது. அத்தகைய கலைப்பாடங்கள் மறைந்துவருவது துரதிருஷ்டவசமானது. மறைந்துவருவதன் காரணம் இத்தகைய படிப்புகள் உடனடி வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதில்லை என்பதுதான். மேலோட்டமாகப் பார்த்தால் இதில் உண்மையிருப்பதாகவே தோன்றும்.ஆனால், உண்மையில் எல்லாப் பாடங்களும் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவன தான்.அதற்கு, நாம் நம்மை எந்தளவுக்கு தயார்படுத்திக்கொள்கிறோம் என்பதனைப் பொறுத்தது.

பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு கல்லூரிகள் மிகவும் குறைவு. ஆனால், அம்மாநிலத்திலிருந்துதான் பல IAS, IPS ஆண்டுதோறும் வெளிவருகிறார்கள். எப்படி? அங்கு ஆரம்பத்திலிருந்தே போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கேற்ற படிப்பினையே(B.A – History, Political Science, Sociology, Economics) தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்வுகளிலும் எளிதாக வெற்றிபெறுகிறார்கள். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை யாவரும் அறிந்தது பொறியியல் படிப்புகளும் அதுசார்ந்த வேலைவாய்ப்புகளும் தான். தமிழகத்தில் எத்தனை C.A., இருக்கிறார்கள்? வடமாநிலங்களில் B.Com., படித்துவிட்டு மூன்றாண்டுகளிலேயே C.A., யும் முடித்துவிட்டு இலட்சங்களில் ஊதியம் பெறுகின்றனர்.

சமீபத்தில் பத்திரிக்கையில் படித்த செய்தி என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலூர் அரசு கலைக்கல்லூரியில் M.A History படிக்க கூவிக்கூவி அழைத்தும் யாரும் படிக்க முன்வரவில்லை. இத்தனைக்கும் படிப்புக் கட்டணம் வெறும் ரூ.5 மட்டும் தான். இம்மாதிரியான கலைப்பாடங்களை படிக்க அரசு ஊக்குவிப்பது கிடையாது. அதுமட்டுமல்லாது, குறைந்தளவு மாணவர் சேர்க்கையிருப்பின் அப்பாடங்களை மூடிவிடவும் அறிவுரை வழங்கியுள்ளது. பொறுப்புள்ள அரசாக செயல்படாமல் வணிகநோக்கில் செயல்படும் அரசின்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, தமிழ்பாடங்கள் தமிழகத்தைவிட்டு மறைந்து வருகிறது. தமிழ் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் மற்ற பாடங்களும் மறைந்துவிட்டதெனில் தமிழக மாணவர்கள் எந்திரத்தன்மையில் தான் செயல்படுவர்.